சென்னை: சென்னை மாநகராட்சி இணையதள இணைப்பில், சுத்தமான கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கருத்துக்கள், ஆலோசனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துறையின் சார்பில் https://chennaicorporation.gov.in/gcc/Clean_Construction/ என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பில் அனைத்து மண்டலங்களிலும் சுத்தமான கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: காற்று மாசுபாட்டை தணிப்பதற்காக கட்டுமான பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் நடத்தப்படும் கட்டிட கட்டுமானங்கள், ஆர்.ம்.சி/ பேச்சிங் பிளான்ட்ஸ் மற்றும் இதர கட்டுமான பணிகளுக்கு இவை பொருந்தும்.
* ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில், வெளிப்புற இடங்களில் தூசி மற்றும் குப்பை பரவுவதை தடுக்க, தளத்தை சுற்றி 6 மீட்டர் உயரமுள்ள தகரம்/ உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கருக்கும் அதிகமான தளப் பரப்பு கொண்ட திட்ட தளங்களில் அல்லது 70 மீட்டருக்கும் உயரமான கட்டிடங்கள் மற்றும் அனைத்து ஆர்.எம்.சி ஆலைகளிலும், வெளிப்புற இடங்களில் தூசி மற்றும் குப்பை பரவுவதை தடுக்க, தளத்தை சுற்றி 10 மீட்டர் உயரமுள்ள தகரம்/ உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* கட்டுமானம் செய்யப்படும் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் வெளிவரும் தூசி துகள்கள் பரவுவதை தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி/ தார்ப்பாய்/ இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும். தூசிகள் உருவாகும் பகுதிகளிள் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் (அதிக முக்கியத்துவம்). இடித்தல், தோண்டுதல், வெட்டுதல், துளையிடுதல், மெருகூட்டுதல், கலக்குதல் போன்ற பணிகளின் போது உருவாகும் தூசிகள் தடுக்கும் நோக்கில் தொடர்ந்து தானாக இயங்கும் தெளிப்பான்கள்/ இயந்திர தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து தூசி மற்றும் குப்பை பரவுவதை தடுக்க வேண்டும்.
* அனைத்து கட்டுமான பொருட்களும், தோண்டப்பட்ட மண் மற்றும் கட்டிட இடிப்பாட்டு கழிவுகள் தளத்தில் தனியாக அதற்காக ஓதுக்கப்பட்ட இடத்தில் சேமிக்கப்பட வேண்டும், அவை சாலைகள் அல்லது நடைபாதைகளில் கொட்டப்பட கூடாது மற்றும் அவற்றிலிருந்து காற்றினால் பரவும் தூசிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 200 ஜி.எஸ்.எம் உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் தாள் / தார்பாலினால் மூடப்பட்டிருக்க வேண்டும். தூசி துகள்களை குறைப்பதை உறுதி செய்யும் வகையில் கட்டுமான தளங்களில் உருவாகும் தூசி மற்றும் குப்பையை வாருதல், சுத்தம் செய்தல், தண்ணீர் தெளித்தல் மற்றும் துடைத்தல் போன்றவற்றின் மூலம் தளத்தில் வழக்கமான பராமரிப்பை நாள் முழுவதும் கட்டுமான பணி புரிபவர் மேற்கொள்ள வேண்டும்.
* கட்டுமானத்தின் போது உருவாகும் எந்தவொரு கழிவு பொருட்களையும் திறந்த வெளியில் காற்றில் பரவுவதை / கலைப்பதை தவிர்க்க மூடப்பட்ட தட்டுகள், தூசிச் சட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். முறையாக மூடப்பட்ட லிப்ட் ஷாப்ட்களும் தூசி சேமிப்பானாக பயன்படுத்தப்படலாம். எஞ்சியிருக்கும் அனைத்து கட்டுமான பொருட்கள்/ கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகள் மாநகராட்ச்சியின் சி மற்றும் டி கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களின்படி பிரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்ப வேண்டும், மேலும் மாநகராட்சியின் சி மற்றும் டி கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களின்படி மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட சி மற்றும் டி கழிவு மேலாண்மை தளங்களுக்கு பிரிக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
* பொருட்கள், கட்டிட இடிப்பாடு கழிவுகள் மற்றும் அதை சார்ந்த கழிவுகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் மாசைத் தவிர்ப்பதற்காக அதிக சுமைகளை ஏற்றிச்செல்லக் கூடாது, மேலும் தூசிகள் பரவுவதை தடுக்க அவற்றின் சேமிப்புப் பகுதிகள் சுற்றி மேல் மற்றும் பக்கவாட்டில் உள்ள திறந்த பகுதிகள் முற்றிலும் தார்பாலின் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும்.
* போக்குவரத்தின் போது தார்பாலின்கள் சரியாக கட்டப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் தளத்தில் இருந்து வெளியேறும் முன் தானாக இயங்கும் இயந்திரம்/ கைமுறையாக வாகனங்களின் சக்கரங்களை கழுவுதல் மேற்கொள்ள வேண்டும். நுழைவு/ வெளியேறும் இடங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, வாகனங்களால் தூசி/ சேறுகள் அதை ஒட்டிவுள்ள சாலைகளில் பரவுவதை தடுக்க வேண்டும்.
* காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, உயரமான கட்டிடத் தளங்களில் (18.5 மீட்டருக்கு மேல்) சிசிடிவி கேமரா கண்காணிப்பை கட்டிடம் கட்டுபவர் பயன்படுத்த வேண்டும். சிசிடிவி காட்சிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஆய்வுக்கு சமர்பிக்க வேண்டும்.தளங்களில் செயல்படும் டி.ஜி செட்கள், எல்.பி.ஜி/ டி.என்.ஜி/ மின்சாரம், எரிபொருள் பயன்முறை போன்ற சுத்தமான எரிபொருளில் இயங்குதல் வேண்டும். மேலும் அவற்றில் மாசு கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் அவை எம்.ஓ.இ.எப்.சி.சி வழிகாட்டுதல்களின்படி இயக்கப்படுதல் வேண்டும்.
* பொருட்கள் கட்டிட இடிப்பாடு கழிவுகள் மற்றும் அதை சார்ந்த கழிவுகளை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டாயம் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கட்டிடம் கட்டுபவர் தளத்தில் ஒரு தளப் பொறியாளர்/ சுற்றுச்சூழல் பொறியாளர்/ திட்ட மேலாளர் அல்லது நிர்வாக மட்டத்தில் பொருத்தமான தள பணியாளர்களை நியமித்து, திட்டத்தின் வாழ்க்கை சுழற்சிக்கான காற்று மாசுபாட்டை தணிக்கும் வகையில் திட்டத்தை உருவாக்கி, திட்டத்தின் கால சுழற்சிக்கு ஏற்றார்போல் செயல்படுத்திட வேண்டும் (நடுத்தர முக்கியத்துவம்).
* தளத்தில் உள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்ற அனைத்து ஊழியர்களுக்கு கட்டிடம் கட்டுபவர் காற்று மாசுபடுதலை தவிர்ப்பது பற்றிய புரிதலை/ விழிப்புனர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கட்டிடம் கட்டுபவர் ஊழியர்களுக்கு இது தொடர்பான புரிதல் ஏற்படுத்தும் வகையில் அது சம்மந்தமான விழிப்புணர்வு பதாகைகள்/ படங்கள் போன்றவற்றை தளத்தில் நிறுவியிருக்க வேண்டும்.
* மாசுபட்ட காற்றில் உள்ள துகள்களை சுவாசிப்பதில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க,சுவாச முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் போன்ற முறையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ) கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த வரைவு வழிகாட்டுதல்களின் மீது சேவை வழங்குநர்கள், கட்டிட அமைப்பாளர்கள், கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் swmcleanconstruction@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* விதிமீறினால் அபராதம்
மாநகராட்சி அதிகாரிகள் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநகராட்சி தளங்களில் கள ஆய்வுகளை மேற்கொள்ளலாம், மேலும் கட்டிடம் கட்டுபவர், மாநகராட்சி கேட்கும் பட்சத்தில் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் தளத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களை அனுமதிக்க வேண்டும். மேற்கூறிய வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கீழ் உள்ளவாறு அபராதம் விதிக்கப்படும்.
20,000 ச.மீட்டருக்கு (பியுஏ) அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறுதலுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 500 ச.மீட்டருக்கு மேல் 20,000 ச.மீ.,வரை பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறுதலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 300 ச.மீட்டர் முதல் 500 ச.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறுதலுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
* 10 நாட்கள் அவகாசம்
நடுத்தர/ குறைந்த முக்கியத்துவம் கொண்ட வழிகாட்டுதல்களில் விதிமீறல்கள் ஏற்பட்டால், மீறல்களை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு அதை சரி செய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த விதிமீறல்கள் அல்லது மீண்டும் மீண்டும் மீறல்களை சரிசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட 15 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால், அபராதத்துடன் கூடுதலாக கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.