சென்னை: வாடிக்கையாளருக்கு தரம் குறைந்த உணவு விநியோகம் செய்த விவகாரத்தில் சுமோட்டோ மற்றும் உணவகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு சென்னை நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் சுமோட்டோ மூலம் அசைவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை உட்கொண்ட பின்னர் ஜெகபிரபுக்கு மூச்சுத்திணறல், தலைச் சுற்றல் மற்றும் நெஞ்சடைப்பு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவுடன் உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த உணவகத்தில் சுகாதரமற்ற முறையில் உண்வு தயாரிக்கப்படுவதை கண்டறிந்து 2,000 ரூபாய் அபரதாமும் விதித்தனர். இந்நிலையில் தனக்கு உணவு டெலிவரி செய்த சுமோட்டோ மற்றும் உணவு தயாரித்து தந்த மெஸ் ஆகியோர் ரூ.250 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் சுமோட்டோ ஆகியவை இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டது.