சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இன்று வேலூர் செல்கிறார். காலை 10.25 மணிக்கு சீரடி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். ரூ.198 கோடியில் தரைத்தளம், 7 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சேர்க்காட்டில் தாலுகா மருத்துவமனை, 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் காணொலியில் திறக்கிறார்.
சந்தைமேட்டில் கலைஞர் அறிவாலயம், நூலகம், கலைஞர் முழு உருவ வெண்கலை சிலையை திறந்து வைக்கிறார். முதல்வரின் வேலூர் பயணத்தை ஒட்டி சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் 350 பேர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்து வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.