திருச்சி: சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் சௌந்தர்(39) ஓட்டினார். உடன் நடத்துனர் சின்னதம்பி இருந்தார். இதில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலை மற்றும் சர்வீஸ் சாலையை கடந்து ரோட்டோரத்தில் இருந்த பூசாரி குளத்தில் கவிழ்ந்தது. அந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் வந்து பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.