சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில், பீச்-செங்கல்பட்டு இடையே இன்னும் 15 நாட்களில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இத்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏ.சி. ரயில் இயக்கத்தின் தேவை, அதிக மக்கள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் அனுப்பியது. இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்காக, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது வந்தது. தற்போது, இந்த ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் மொத்தம் 1,116 பேர் அமர்ந்து செல்லலாம். 3,798 பேர் நின்று கொண்டும் பயணிக்க முடியும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சி.சி.டிவி. கேமராக்கள் இருக்கும். இந்த ஏசி மின்சார ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ரயிலாகும். இந்த ரயில் சென்னை பீச் – செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே, அதிக வசதி கொண்ட மின்சார ரயில் சென்னையில் தான் முதன்முதலாக இயக்கப்படவுள்ளது.
சென்னை ஐசிஎப் ஆலையில் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது, இன்னும் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைக்கப்பட்டதும், பீச்-செங்கல்பட்டு இடையே சோதனை முறையில் இயக்கப்படும், அதேபோல் இந்த ரயிலை இயக்குவதற்கு லோகோ பைலட்டுக்கு கற்று தரப்படும், எந்தெந்த ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும், எவ்வளவு கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் போன்ற சோதனைகள் நடத்தப்படும். ஏனென்றால் இந்த ரயில் மூலம் எவ்வளவு வருமானம் தெற்கு ரயில்வேக்கு கிடைக்கும் என்பதெல்லாம் ஆராய வேண்டும், இந்த ஏசி ரயில் பீச்-செங்கல்பட்டு இடையே இன்னும் 15 நாட்களில் ரயில் இயக்கப்படும்.
இதுதவிர்த்து, அடுத்த சில மாதங்களில் மூர் மார்க்கெட்-அரக்கோணம் இடையே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்க திட்டமில்லை. இவ்வாறு தெரிவித்தார். இந்த ஏசி புறநகர் ரயிலை, தொடக்கி வைக்க தெற்கு ரயில்வே சார்பில், ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் தொடங்கி வைக்க உத்தரவிட்டப்பட்டது. அதன்பேரில் ஆளுநர் ரவியை வைத்து தொடங்க தெற்கு ரயில்வே தற்போது திட்டமிட்டுள்ளது.