மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது மீண்டும் சக்திவாய்ந்த லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 வாரத்தில் 3வது முறையாக சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. புனேயில் இருந்து இன்று அதிகாலை 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டது.
இதனால் தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் வட்ட மடித்துவிட்டு, பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை, கிண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில், 2 வாரங்களில் இது 3வது சம்பவம். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புனேயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 178 பயணிகளுடன் இன்று அதிகாலை தரையிறங்க வந்தது. அதிகாலை 1.10 மணியளவில் சென்னையில் தரை யிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து கொண்டு இருந்தது.
அப்போது, கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி அடிக்கப் பட்டது. இதனால் நிலைகுலைந்த விமானிகள், அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்து கொண்டு விமானத்தை மேலே பறக்க செய்தனர். இதையடுத்து அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையம் மற்றும் விமான பாதுகாப்புத்துறையான பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகம் ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே, லேசர் லைட் ஒளி அடுத்த சில வினாடிகளில் மறைந்துவிட்டது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 1.20 மணிக்கு தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறங்கினர். இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த தோடு பரங்கிமலை மற்றும் கிண்டி காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் இதுபோன்ற லேசர் லைட் ஒளி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இதுபோன்று தரையிறங்கும் விமானங்கள் மீது நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் லேசர் லைட் ஒளி அடித்து, விமானங்கள் தரையிறங்குவதற்கு இடையூறுகளை சமூகவிரோத கும்பல் ஏற்படுத்தினர். விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் எடுத்த நடவடிக்கையால் சம்பவம் தடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விமானங்கள் தரையிறங்கும்போது லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 3வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.