சென்னை: சென்னை மண்டலத்திற்குட்பட்ட வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் ஆர்ஆர்ஆர் திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் செயலாளர் மணிவாசன், கூடுதல் செயலாளர் மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.