திருவனந்தபுரம் : இந்தியாவில் கடலில் வாழும் அரியவகை உயிரினமான கடல் குதிரைகளை சேகரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2001ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். சில சமயங்களில் கடலில் மீனவர்கள் வலை வீசும்போது இந்த கடல் குதிரைகள் சிக்குவது உண்டு. ஆனால் சட்ட சிக்கலுக்கு பயந்து பெரும்பாலான மீனவர்கள் அவற்றை மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள். இருப்பினும் கடல் குதிரையில் மருத்துவ குணம் இருப்பதாக கூறி பெரும் விலை கொடுத்து அவற்றை வாங்க பலரும் தயாராக இருப்பதால் சில மீனவர்கள் கடலில் இருந்து பிடித்து அதிக விலைக்கு இவற்றை விற்பது உண்டு.
இந்நிலையில் பாலக்காடு பஸ் நிலையம் அருகே ஒருவர் கடல் குதிரைகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக பாலக்காடு வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் 96 கடல் குதிரைகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். கடல் குதிரைகளை கைப்பற்றிய வனத்துறையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சென்னையை சேர்ந்த சத்ய எழிலரசன் (42) என தெரியவந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், கடல் குதிரைகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.