சென்னை: குடிநீர் வாரிய டேட்டா சென்டரில் அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 28, 29ம் தேதிகளில் இணையதள சேவைகள் அனைத்தும் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னைக் குடிநீர் வாரிய சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத் தரவு மையத்தில் (டேட்டா சென்டர்) அவசர பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வரும் 28, 29ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாகிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துதல், புகார்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்ற முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செயல்படாது.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் பாராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு வரும் 30ம்தேதி காலை 9 மணி முதல் வழக்கம் போல் இணையதள சேவைகள் அனைத்தும் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.