சென்னை: சென்னையில் நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்தது. சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்ததப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி 40 கி.மீ வேகம் வரை செல்லலாம். இரு சக்கர 50 கி.மீ வேகம் வரை செல்லலாம். மேலும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.