சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் வழங்க இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சியில் உலக அளவில் இந்தியாவின் பெயர் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை. அதையும் தாண்டி சமீபத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடியை இந்தியா கொடுத்தது.
தமிழகத்தில் நடந்து வரும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இது மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்யட்டும். அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கட்டும். அவர்களே முடிவு செய்யட்டும். இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
* ஒன்றிய அமைச்சரின் பேட்டியை பாதியில் நிறுத்திய நயினார்
தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டு கால சாதனை மலரை ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் நேற்று வெளியிட்டு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒன்றிய அமைச்சர் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதனால், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுப்பானார். உடனே, அவர் எழுந்து கைகளை காண்பித்து பத்திரிகையாளர் சந்திப்பு இத்துடன் போதும், முடித்துக் கொள்ளலாம் என்றார். தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பையும் முடித்து வைத்தார். திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தியதால் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செய்வதறியாது அங்கிருந்து கிளம்பினார்.
* தமிழர்கள் பழமையானவர்கள் என ஒப்புக்கொள்ள தயக்கம் ஏன்? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
கீழடி ஆய்வுகள் குறித்து அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும் என்ற ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்துக்கு, பதில் அளித்துள் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
தமிழர்கள் 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்துவிடாதீர்கள் வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?