* பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
* காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன்
சென்னை: சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் தைப்பூசமும் ஒன்றாக கருதப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் ஒன்றாக இணைந்து வரும் நாள் தைப்பூசம் ஆகும். முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினமே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம். இந்த தைப்பூச நாளில் விரதமிருந்தால் கேட்ட வரத்தை முருகன் தந்தருள்வார் என்பது ஐதீகம். எனவே வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும், ஞானமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தைப்பூச நாளில் விரதம் மேற்கொள்வது நல்லது.
அதன்படி நேற்று தைப்பூச விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்கள் பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடின. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் முருகன் கோயில்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டது. தைப்பூச நாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வந்த பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. வடபழனியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்த நிலையில் மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காவடி தூக்கி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் சிறப்பு வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பால் குடம் எடுத்து வருவோர், பொது தரிசனத்திற்கு வருவோர் தெற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரவு 8.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டது. வடபழனி முருகன் கோயிலின் 4 மாட விதியிலும் நீண்ட வரிசையில் 3 முதல் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிக்காக 300 மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். பொங்கல், தீபாவளி போன்று தைப்பூசம் என்பதும் தமிழர்களுக்கு ஒரு முக்கிய விழா என முருகன் கோயிலுக்கு வந்த பக்கதர்கள் தெரிவித்தனர்.
இதேபோல சென்னையின் பிரசித்தி பெற்ற பிற கோயில்களான பாரிமுனை கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோயில், பாம்பன் சுவாமிகள், மயிலை கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா விமரிசையாக நடந்தது. சென்னை புறநகர்களான குரோம்பேட்டை, நேரு நகர், குமரன் குன்றம், வல்லக்கோட்டை, அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா களை கட்டியது. முருகன் கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா… வேலனுக்கு அரோகரா…’ என்று ஒருசேர கோஷம் எழுப்பியது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.