சென்னை: தமிழக பாஜ மேலிட குழுவினர் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று திடீரென சந்தித்து பேசினர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை அடுத்து அங்கு மோதல் ஏற்பட்டது. வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜ பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து பிரச்னைகளை நேரில் கண்டறிய 4 பேர் கொண்ட குழுவை பாஜ மேலிடம் நியமித்தது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா மாநில பாஜ தலைவர் புரந்தரேஸ்வரி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், எம்பியுமான சத்யபால் சிங், பெங்களூர் எம்.பி. மோகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இக் குழு நேற்று நிர்வாகிகளை சந்தித்து பேசியது. கைது செய்யப்பட்டுள்ள பாஜவினர் இல்லங்களுக்கு சென்றனர். மேலும் பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தையும் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து நேற்று பிற்பகல் பாஜ குழுவினர் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.