சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் தொடரும் கொலைகளால் சிசிடிவி கேமராக்களை விரைவாக பொருத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பயணிகள் பயணம் செய்யும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. பறக்கும் ரயில் நிலையங்களில் போதிய வெளிச்சமின்மை, துர்நாற்றம் போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 2016ம் ஆண்டு சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட போது அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்துமாறு உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. தொடர்ந்து 2020ம் ஆண்டு நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 102 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கடந்த மார்ச் மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களை தவிர்த்து வேறு எங்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்படாமல் உள்ளது.
கடந்த புதன்கிழமை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரி ராஜேஷ்வரியை வெட்டி கொலை செய்தவர்களை போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். இதேபோல் 2 வாரங்களுக்கு முன்பு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் பிரீத்தி என்ற இளம்பெண் வழிப்பறி கும்பலால் கொல்லப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் சத்யா என்ற கல்லூரி மாணவி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டார். இந்த 3 ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி இல்லாததால் கொலைக்காரர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சிசிடிவி பொருத்தாமல் இருப்பது ஒரு பக்கம் என்றால், பல ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்கு போலீசார்களே இல்லாமல் இருப்பது வாடிக்கையாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டும் பாதுகாப்பை அதிகரிப்பது என்பது ரயில்வே காவல்துறைக்கு வழக்கமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெண்களுக்கான பெட்டிகளை தொடர்ச்சியாக ரயிலின் நடுப்பகுதியில் மாற்றம் செய்ய சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினர் பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரையை செயல்படுத்துவதற்கு குறித்து, தெற்கு ரயில்வே பொறியியல் பிரிவினருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளன. இந்த மாற்றமும் சிசிடிவி பொருத்தும் பணி போல் மெதுவாக ஆரம்பிக்காமல் விரைவில் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.