தூத்துக்குடி: தமிழ்நாட்டில் 2வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறி வருகிறது. 250 பேர் பயணிக்கும் ஏ321 ரக ஏர் பஸ் விமானம் வந்து செல்ல வசதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், ரயில், கப்பல், விமானம் என 4 வகையான போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக தூத்துக்குடி உள்ளது. துறைமுக நகரமாக உள்ள தூத்துக்குடியில் ஏற்கனவே ஸ்பிக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்களின் பிரதான விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் தான் இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை தான் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்த விமான நிலையத்தை பொருத்தவரை தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் ஐந்து முறையும், தூத்துக்குடி-பெங்களூரு இடையே தினமும் 2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தை தற்போது சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச விமானங்களும் இனி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும்.
இதற்கான சூழ்நிலை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விமான சேவையை தொடங்கும் வகையில் ரூ.227.33 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 17341 ச.மீ பரப்பளவில் அமைக்கப்படும் புதிய முனையத்தில் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்பு துறை கட்டிடங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலைய புதிய முனையத்திற்கு செல்லும் வகையில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது. இதற்காக தற்போதுள்ள நுழைவாயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுன்டர்களும், 3 ஏரோ பிரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும் அமைக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 விஐபி அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள் என அதிநவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சூரிய சக்தி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள், விரைவில் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் மிகப்பெரிய ஏ-321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். தற்போது வரை 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விமான நிலைய உயரதிகாரிகள் கூறுகையில், ‘விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததும் சென்னை, பெங்களூரு மட்டுமின்றி, ஐதராபாத், குஜராத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் பெரிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படும். தற்போது, 78 பயணிகள் வரை செல்லும் ஏடிஆர் ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் சுமார் 250 பயணிகள் செல்லும் ஏ 321 ரக ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3611 மீட்டர். அதற்கு அடுத்தபடியாக 3115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட 2வது பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக தூத்துக்குடி மாறிவருகிறது. இதன் மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில்நிறுவனங்களின் அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் அதிகளவில் பயனடைவர்’ என்றனர்.