சென்னை: சிறிய அளவிலான தொழிலை செய்பவர்கள் ஒருபோதும் தங்களை சிறு தொழிலதிபர்கள் என்று நினைத்துவிடக்கூடாது என ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லகு உத்யோக் பாரதி (எல்யூபி) அமைப்பு சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களுக்கான சங்கமம்-2024 எனும் மாநாடு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஜோகோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உள்பட இந்தியாவில் தொழில் துறையில் சிறந்த விளங்கும் 13 தொழிலதிபர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது வளர்ந்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான இறக்குமதி, ஏற்றுமதி குறித்த தகவல்கள், துறைசார்ந்து தற்போதைய வாய்ப்புகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பலன்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர்.
இதன் தொடக்க விழாவில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேசுகையில், ‘‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான இந்த மாநாடு சிறந்த முன்னெடுப்பாகும். சிறிய அளவிலான தொழிலை செய்பவர்கள் ஒருபோதும் தங்களை சிறு தொழிலதிபர்கள் என்று நினைத்துவிடக்கூடாது. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் துறையில் தொடர்ந்து நிலைப்பது கடினமாகிவிடும். ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்வில் எல்யூபி அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஓம் பிரகாஷ் ஜி குப்தா, தமிழ்நாடு பொதுச் செயலாளர் வீர செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.