சென்னை: சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தி ஆகும் தூய்மையில்லாத சூழல் இருந்தால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடங்கியுள்ளது. தற்போது வரை 4 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த டெங்குவை ஒழிக்க தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தி ஆகும் தூய்மையில்லாத சூழல் இருந்தால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா பரவுவதற்கு காரணமாக உள்ள கொசுப்புழு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. மனிதர்கள் செல்ல இயலாத நீர்நிலை பகுதிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் மாநகராட்சி பணியாளர்கள் தினசரி ஆய்வு மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.
மேலும், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்காத கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.12.85 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. டெங்கு கொசு பகலில் தான் கடிக்கும். நன்னீரில்தான் இந்த கொசு உற்பத்தியாகும். எனவே தண்ணீர் டிரம்களை திறந்த நிலையில் துணி போட்டு அதன் மீது மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் என்பது அவசியம். பொதுமக்கள் இதனை முழுமையாக கடைபிடித்தால் டெங்கு கொசுவை ஒழிப்பது உறுதி.