Wednesday, June 19, 2024
Home » மழையை எதிர்கொள்ள சென்னை தயார்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

மழையை எதிர்கொள்ள சென்னை தயார்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

by Ranjith

சென்னை: சராசரி மழை பெய்தால் அதனை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் நடந்து வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும். அதிகமாக மழை பெய்யும்போது மழைநீர் தேங்க கூடாது என சென்னை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதனை ஆய்வு செய்து வருகிறோம். கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போதுதான் அதிக மழை பெய்யும். ஆனால் சில சமயத்தில் தென்மேற்கு பருவ மழையிலும் அதிக மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறோம்.

நகர்ப்புறத்தில் இருக்கும் மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள், காற்று அதிகமாக இருக்கும் என்பதால் மரங்கள் விழும். எனவே மரத்தை அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறோம். சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. ஜனவரி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழைக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சென்னை ஆணையர் தலைமையிலும், மாதம் ஒரு முறை எனது தலைமையிலும் மின்சார துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்து வரும் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. வடசென்னை மற்றும் தென் சென்னையில் நடந்து வரும் திட்டம் முடிய இன்னும் காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் மத்திய சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே பணிகள் இன்னும் முடியவில்லை. அதுவும் வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிந்து விடும்.

சென்னையில் சராசரி மழை அதாவது 24 மணி நேரத்திற்குள் 15 அல்லது 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திடீரென அதிக மழை அல்லது இயல்பை விட அதிக மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கும். இருப்பினும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர்களை ஆய்வு செய்து அறிக்கை தர அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

seven − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi