சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒருசில தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படியில், நேற்று முன்தினம் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றும் இந்த சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது.
இந்நிலையில் 3வது நாளாக இன்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. எழும்பூரில் உள்ள ருக்மணி லட்சுமிபதி சாலை, அண்ணாமலை வளாகத்திலும் சவுகார்பேட்டையில் உள்ள அலங்கார் காம்ப்ளக்ஸ் என்ற வளாகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்துகின்றனர். கடந்த 2 நாட்கள் நடந்த சோதனையில் வருமான வரித்துறை ஆவணங்கள், ஜி.எஸ்.டி. ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அலுவலக கணக்காளர்கள் ஊழியர்களிடம் அதுபற்றி விசாரித்திருந்தனர்.