
சென்னை: ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் தங்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் நல பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே 100க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் இரவிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பணி நிரந்தரம் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணியில் இருக்கும் போதே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை மக்கள் நல பணியாளர்கள் கோரிக்கையாகும்.
மக்கள் நல பணியாளர்கள் அதிமுக அரசால் 3 முறை பணிநீக்கம் செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக பல்வேறு சட்ட போராட்டம் நடத்தி வருபவர்களாவர் மொத்தமுள்ள 13,500 பேருக்கு ஏற்கனவே முதலமைச்சர் வாக்குறுதி அளித்த காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணியும் வழங்க வேண்டும் என்பது மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கையாகும். தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்றி தரவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.