ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோல் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவிலும் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவிலிருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மலர் தொட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது.


