Saturday, March 2, 2024
Home » சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை மோடி தொடங்கி வைத்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை மோடி தொடங்கி வைத்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு

by Karthik Yash

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு 3 நாட்கள் பயணமாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 4.52 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மேயர் பிரியா வரவேற்றனர்.

மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ பிரமுகர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், வைத்திலிங்கம், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டரில் மோடி ஐஎன்எஸ் அடையாறு புறப்பட்டு சென்றார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றனர். பின்னர் தனித்தனி காரில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்டனர். வழிநெடுகிலும் மோடி மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலை 6.03 மணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மேடைக்கு வந்தனர். தேசிய கீதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. போட்டியை தொடங்கி வைப்பதற்காக தமிழ் சுடரை, விளையாட்டு வீரர்கள் சரத்கமல், சுபா ஆகியோர் மேடைக்கு கொண்டு வந்தனர். அதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைக்குள் வைத்தார். அப்போது மேடைக்கு எதிரே ‘தமிழ்சுடர்’ த என்ற எழுத்துக்களுடன் மேல் எழும்பி வந்தது. அப்போது உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சுடர் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது.
அதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து, கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: வணக்கம் சென்னை. வணக்கம் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் மந்திரி மு.க.ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், இங்கு விளையாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விளையாட்டு போட்டி மூலம் நமது இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் புதிய இந்தியாவை படைப்பார்கள் என்று நம்புகிறேன். உங்கள் திறமை, ஆர்வம் நம் நாட்டை உலக அரங்கில் புதிய உயர்வுக்கு கொண்டு செல்லும். அனைத்து மாநில விளையாட்டு வீரர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறந்த ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாடு மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலமாகும். இந்த விளையாட்டு போட்டிகள் மூலம் அனைத்து மாநில விளையாட்டு வீரர்களிடம் நல்ல நட்பை உருவாக்க முடியும்.

தமிழ்நாட்டில் புதிய தூர்தர்ஷன் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 1975ல் சென்னையில் தூர்தர்ஷன் தொடங்கப்பட்டு இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு வருகிது. நாட்டில் இதுவரை 15 எப்.எம். சேனல்கள்தான் இருந்தன. தற்போது 25 சேனல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு தமிழ்நாடு மிக முக்கியத்துவம் தருகிறது. இந்த மாநிலத்திலிருந்துதான் பல சேம்பியன்கள் உருவாகியுள்ளனர். விளையாட்டுகளில் சேம்பியன்களை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாராலிம்பிக் மாரியப்பன் ஆகிய சேம்பியன்களை தந்த மாநிலம். எத்தனையோ விளையாட்டுகள் இங்கிருந்து உருவாகியுள்ளன. தமிழ்நாட்டின் இந்த முயற்சி அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நம் நாடு உலக அரங்கில் முதல் இடத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் அனுபவம் மிக முக்கியம். இளைஞர்களுக்கான கேலோ இந்தியா இங்கிருந்துதான் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2018லிருந்து 15 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம். விளையாட்டு வீரர்கள் அழகான சென்னையை காணலாம். கோயில்கள் நிறைந்த மதுரையையும், திருச்சியையும் பார்க்கலாம், கலாச்சாரமிக்க கோவையையும் பார்க்கலாம். அதற்காகத்தான் இந்த 4 பெரு நகரங்களிலும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. வில்வித்தை, அத்லெடிக், பேட்மிண்டன் ஆகியவற்றை போல் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பமும் உள்ளது. அந்த விளையாட்டையும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி விளையாட்டுகள் இருக்கும். அவை அனைத்திற்கும் முக்கியத்துவம் தரப்படும்.

தமிழ்நாடு திருவள்ளுவரின் மண்ணாகும். மக்கள் முன்னேற்றத்திற்காக திருவள்ளுவர் குறள் தந்துள்ளார். அதன் மூலம் வழிகாட்டியுள்ளார். அதை மனதில் கொண்டு நமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். வீரர்களுக்கு திறமை முக்கியம். போட்டி என்றால் என்ன என்பதை வீரமங்கை வேலு நாச்சியார் நமக்கு விளக்கியுள்ளார். அவரின் வீரத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டில் 20 விளையாட்டுகளில் 50 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் வகையில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு தரப்படும். கடந்த 2014க்கு பிறகு விளையாட்டில் நமது நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் நாம் சிறப்பாக செயல்பட்டு திறமைகளை உலகுக்கு காட்டியுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு துறை சீர்திருத்தப்பட்டுள்ளது. பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்து சிஸ்டமும் வெளிப்படைத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நமது இளம் விளையாட்டு வீரர்கள் அத்லெடிக்கில் சர்வதேச அளவில் முன்னணி பெற வேண்டும். அடுத்த ஒலிம்பிக் நமது இலக்கு. அதில் நாம் சாதித்து காட்ட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் அனைத்து தரப்பு இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். கிராமங்களில் உள்ள விளையாட்டுகளுக்கும் வாய்ப்புகள் தரப்படும். இந்தியா கடற்கரைகள் நிறைந்த நாடு. அதனால், பீச் வாலிபாலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அந்த விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். வரும் 2029ல் ஒலிம்பிக் மற்றும் அதை தொடர்ந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நமது இளம் விளையாட்டு வீரர்கள் பெருமளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3 புதிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவுள்ளது. அதில் விளையாட்டு துறை முக்கியமானது. விளையாட்டு மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவை உருவாக்கப்படும். அதற்காக ரூ.1 லட்சம் கோடிவரை செலவு செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. விளையாட்டு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும். நமது கிராமங்களிலும் விளையாட்டை மேம்படுத்த வேண்டும். இது விளையாட்டு மட்டுமல்ல, இந்தியாவின் சாதனையும்கூட. நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டும். புதிய ரெக்கார்டு படைக்க வேண்டும். எழுங்கள் உங்களை யார் என்று காட்டுங்கள்.
இவ்வாறு பிரதமர் பேசினார். அதை தொடர்ந்து, போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான காட்சிகள் செய்து காட்டப்பட்டன. அதை தொடர்ந்து பிரதமர் மோடி கார் மூலம் ஆளுநர் மாளிகை புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு அங்கு தங்கினார். இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து திருச்சிக்கு பறப்பட்டுச் செல்கிறார்.

சுடரில் ஒளிர்ந்த தமிழ்
* பிரதமரின் இந்தி அல்லது ஆங்கில பேச்சை தமிழில் கேட்க QR code வெளியிடப்பட்டது
* கேலோ போட்டி சுடரின் கைப் பிடியில் தமிழ் மற்றும் தமிழ்நாட்டை குறிக்கும் வகையில் 4 புறமும் த எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது.
* கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்த மைதானத்தில் பிரமாண்டமான பல்வேறு நிறங்களில் விளக்கங்களுடன் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
* தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டியம், புலி ஆட்டம், பறையாட்டம் என தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
* விழா நடைபெற்ற பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

* 5,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நேற்று (19ம் தேதி) தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். இப் போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய நிர்வாக பகுதிகளில் இருந்து 18 வயதிற்குட்பட்ட வயது பிரிவில் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். 1,000க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1,200க்கும் மேற்படட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக இடம் பெறுகின்றன.

You may also like

Leave a Comment

18 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi