சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பின் மாலை நேரத்தில் இருள் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில், மாலை 4.45 மணிக்கு பிறகு சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையாக மழை பெய்தது. தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சேத்துப்பட்டு, எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி சற்று மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையில் “வங்கக்கடலில் ஜூன் 11 அல்லது 12ம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 12ம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 13ம் தேதி வரை சென்னையில் மழை தொடரும்” என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், திருப்பூர் ஆகிய 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.