செங்கல்பட்டு: சென்னையில் அமையவுள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்கு சுதந்திர போராட்டம் தொடர்பான அரிய பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம், என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் 75வது சுதந்திர தின விழா உரையில் அறிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரிய கட்டடமான ஹுமாயூன் மகால் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் பொருட்கள், பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப்பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐஎன்ஏ சீருடைகள், ஐஎன்ஏ அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். மேலும், தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை மேற்படி அருங்காட்சியத்திற்கு நேரிடையாகவும் சென்று வழங்கலாம். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர தின அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.