சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி பதவிகளுக்கு இளமையும், ஊக்கமும், அர்ப்பணிப்பு மற்றும் தலைமை பண்புடைய விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுய தொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நலத்தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியானது கவுரவ பதவியாகும். மேலும் இப்பணிக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்கப்படமாட்டாது.
இந்த பதவிக்கு, குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். 1.7.2025 அன்று 18 வயது மேல் உள்ளவர்களாகவும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பத்துடன் சுய விபரங்கள் அடங்கிய படிவத்தை இணைத்து இம்மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது add1cophqrs4@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.