Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மும்பைக்கு 151 சதவீதம் அதிக நிதியை ஒதுக்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம்: அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசு?

1 கிலோ மீட்டருக்கு செலவிடப்படும் ெதாகை - ஓர் ஒப்பீடு

மும்பை மெட்ரோ திட்டத்தின்1 கிமீக்கு ரூ1113 கோடி

சென்னை மெட்ரோ திட்டத்தின் 1 கிமீ.க்கு ரூ.532 கோடி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டம் ஏப்ரல் 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 118 கி.மீ. நீளத்திற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையை மாநில மற்றும் ஒன்றிய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் ஜனவரி 2019ல் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் கட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஒன்றிய நிதியமைச்சர், சென்னை மெட்ரோ ரயில் 2 கட்ட திட்டம் மாநில பிரிவு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜெஐசிஏ நிறுவனம் 2018ம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. ஒன்றிய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி, சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டமாக அங்கீகரித்து ஒன்றிய அரசின் பங்கான ரூ7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ6,802 கோடியாகும். தமிழக அரசு சார்பில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான ரூ7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்றால் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது ஒன்றிய நிதியமைச்சர், இந்தியாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது, கொச்சி, சென்னை, பெங்களூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருக்கு ரூ30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ6708 கோடி, பூனே நகரத்திற்கு ரூ910 கோடி, தானே நகரத்திற்கு ரூ12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பங்களிப்பு திட்ட அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எவ்வித நிதி ஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு செய்ய முன்வரவில்லை. ஆனால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் படி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.ஆனால் பாஜ கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவைக்கு அதிகமான நிதியை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது.

மும்பையில் 33.5 கிமீ தொலைவிற்கு செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ23,136 கோடியாகும். இதில் ஒன்றிய அரசு பங்கு ரூ16,662 கோடியாகும்.

ஆனால் மகாராஷ்டிரா மாநில அரசின் நிதியான ரூ6474 கோடியையும் சேர்த்து ஒன்றிய அரசே ஒதுக்கியது. மேலும் இத்திட்டத்திற்கு ரூ23,136 கோடி தேவையான நிலையில் ரூ2,018 கோடியையும் கூடுதலாக ஒதுக்கியது. அதன்படி மும்பை 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ25,154 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 1 ரூபாய் கூட ஒதுக்காத ஒன்றிய அரசு, மும்பையில் 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 151% நிதி ஒதுக்கி உள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், தமிழக அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்று ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே வலுத்து வருகிறது.