சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், இட ஒதுக்கீட்டின்படி நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட போக்குவரத்தை இயக்கி, பராமரிப்பதற்கான ஒப்பந்தம் டெல்லி மெட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் செய்யப்படும் நியமனங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல. 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26,660 மட்டுமே வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுவதில்லை.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், குறைந்த அளவிலான நியமனங்களாவது நிரந்தர அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செயல்படுத்தாமல், மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை நியமிக்கிறார்கள். மெட்ரோ ரயில்களை இயக்குவதும், பராமரிப்பதும் மிகவும் நுணுக்கனான பணிகள். இந்த பணிகளுக்கு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் படித்து பட்டயம் பெற்ற இளைஞர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.886 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு. எனவே, மெட்ரோ ரயில் பணிகளுக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றி, நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.