மதுரை: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுவதைபோல், நம் நாட்டிலும் ஆந்திர மாநிலம் அரக்குவேலி மற்றும் தமிழகத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. 2015ம் ஆண்டு முதல் பொள்ளாச்சியில் நடந்து வரும் பலூன் திருவிழாவில் கடந்த ஆண்டு 11 நாடுகள் பங்கேற்றன.
இதற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அடுத்தாண்டு பொங்கலன்று பலூன் திருவிழா நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் நடைபெறும் பலூன் திருவிழா அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலையொட்டி ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் சேர்த்து, ஜனவரி 3ம் வாரத்தில் இந்த திருவிழா நடத்தப்படும் எனத்தெரிகிறது.