சென்னை: சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சரால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள். சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முகாமில் பணியாற்றுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமையகத்திலிருந்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக TNeGA மூலமாக சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்களுக்கு 6.7.2023 அன்று பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலமாக பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். பயோ மெட்ரிக் கருவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலர் e-District மேலாளர்களுடன் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்து மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற இந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.