மன்னார்குடி: சென்னை ஐடி ஊழியர் மீது நடுரோட்டில் கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலால் 3 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (37). சென்னையில் தனியார் ஐடி துறையில் வேலை பார்த்து வரும் இவர், மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் குழந்தைகளை அழைத்து வர நேற்று முன்தினம் மாலை பைக்கில் சென்றார். இபி நகர் அருகே வந்த போது அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்து ஒரு பைக் வேகமாக மோதுவது போல் வந்தது. இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. பின்னர், கோபால கிருஷ்ணன் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து வடசேரி பிரிவு சாலை ஏடிஎம் அருகே 3 வாலிபர்கள், கோபால கிருஷ்ணனை வழி மறித்து நடுரோட்டில் அவரை கம்பால் சரமாரியாக கொலை வெறி தாக்குதலை நடத்தி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது. புகாரின்படி மன்னார்குடி நகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தாக்குதல் நடத்தியவர்கள் மன்னார்குடி மளிகைமேடு சண்முகநாதன் (39), விஜய் (26), அரவிந்தன் (24) என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.