சென்னை : ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒன்றிய முன்னாள் அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். குறிப்பாக அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர தி.நகரில் உள்ள அவரது அலுவலகம், ஈக்காட்டுதாங்கல், குரோம்பேட்டையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை தொடர்கிறது.
குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி, ரேளா மருத்துவமனை, தாகூர் கலைக்கல்லூரி, பூந்தமல்லியில் அமைந்துள்ள சவீதா கல்விக்குழுமம் என ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல புதுச்சேரி அடுத்த பத்துக்கன்னு பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உட்பட தமிழ்நாடு, புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடருகிறது.