சென்னை: சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவன் கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னை ஐஐடியில் 1970ம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த முன்னாள் மாணவன் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா. இவர், ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக ரூ.228 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவர் மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து, இந்தோ-எம்.ஐ.எம் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடி வருவாய் ஈட்டக்கூடிய இரண்டு தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார். இந்திய ஐ.ஐ.டி வரலாற்றிலேயே இதுவரை வழங்கப்பட்ட நன்கொடைகளில் மிக அதிகமான தொகையாக ரூ.228 கோடி வழங்கியுள்ளார். இதற்காக கிருஷ்ணா சிவுகுலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு மையத்திற்கு கிருஷ்ணா சிவுகுலா அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு் பின்னர் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு ரூ.500 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது. அவை அனைத்தும் மாணவர்கள் நலனுக்காக செலவிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி 227வது இடத்திலும், இந்தியாவில் முதல் இடத்திலும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் மாணவன் கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில், ‘‘55 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு பணக்காரர்களாக இருப்பவர்கள், தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை தருகின்றனர்.
கல்வி, சுகாதாரம் போன்ற பலவற்றில் மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவை பயன்படும். இது மாணவர்கள் மனதில் தீப்பொறியை பற்றவைக்கும். மேலும், எனக்கு ஐ.ஐ.டி மெட்ராஸ் பிடிக்கும், ஐ.ஐ.டி மும்பையும் பிடிக்கும். ஏழை குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, தலைசிறந்த படிப்பை ஐ.ஐ.டி வழங்கியது.
கறுப்பு பணம் ஒழிந்தால் மட்டுமே இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருக முடியும். எதிர்காலத்தில் பள்ளிகளுக்கும் நன்கொடை கொடுப்பேன். பெங்களூருவில் 2500 குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கிறோம். நான் இந்து, ஆனால் சிறப்பாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கிறேன். இவ்வாறு கூறினார்.