சென்னை :நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில்,”வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுபெறக்கூடும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13% குறைவாக பெய்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை, இயல்பு அளவான 277.5 மி.மீ.க்கு பதிலாக 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.சென்னையின் சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.சென்னையில் நேற்று அதிகபட்சமாக மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை , திருவாரூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால் 9 மாவட்டங்களிலும் 6.5 செ.மீ.முதல் 12 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்.இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும்,”என்று தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கனமழை பெய்த டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அதேபோன்று, சென்னையில் நேற்று அதிக மழை பெய்தாலும், மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேறியதால் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.