சென்னை : வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 650 லாரிகளில் 7,000 டன் காய்கறிகள் வருகிறது. தினமும் 60 சரக்கு வாகனங்களில் வெங்காயம் வருகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் சில கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது
இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் வெங்காயம் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலையை முழு கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார்.