மீனம்பாக்கம்: கவுகாத்தியில் இருந்து 170 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் எரிபொருள் பிரச்னை காரணமாக நேற்றிரவு பெங்களூர் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதனால் அந்த விமானம் சென்னைக்கு தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அதில் வந்த 170 பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் இருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் 170 பயணிகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் வழக்கமாக இரவு 7.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். எனினும், அந்த விமானம் சென்னையை நெருங்கும்போது, திடீரென விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பது விமானிக்குத் தெரியவந்தது.
இதே நிலையில் சென்னைக்கு விமானம் சென்று தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டதால், சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு 170 பயணிகளுடன் வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை பெங்களூர் விமானநிலையத்தில் தரையிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அந்த விமானம் இரவு 8 மணியளவில் பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து, அங்கு அந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, இன்று காலை தாமதமாக சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானத்தில் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த 170 பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.