சென்னை: சென்னையில் ஒரே மாதத்தில் 40% கண் நோயளிகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. சென்னையில் “மெட்ராஸ் ஐ” என்று அழைக்க கூடிய விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருகிறது. இதனால், கண்கள் சிவந்து போதல், கண் இமைகளில் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்களின் நமைச்சல், போன்ற அறிகுறிகள் உண்டாகும். பாக்டீரியாவால் கண்ணிமையில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
மெட்ராஸ் ஐ -யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சல் வந்து அதற்கு பிறகு கண் வலி ஏற்படும். பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பாக அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் கூறியதாவது: டெல்லி பிறகு தற்போது சென்னையில் கண் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் தற்போது கண் வலி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஒரு மாதத்தில் கண் மருத்துவமனையில் ஒவ்வொரு மருத்துவருக்கும் நோயாளிகள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். மெட்ராஸ் ஐ வருவதை தடுக்க முடியாது, வந்த பிறகு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்தால் மெட்ராஸ் ஐ பரவும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது மிகவும் தவறானது. இது ஒரு தொற்று நோய் மட்டுமே மெட்ராஸ் ஐ வந்தவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் யாரும் பயன்படுத்தக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கென்ன தனியாக அனைத்தும் செய்து கொடுக்க வேண்டும். சுய பாதுகாப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். கண்களை தொடாமல் இருக்க வேண்டும், கண்ணாடி அணிவது மூலம் விரைவில் குணமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள கூடாது. முறையாக மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்தை பயன்படுத்த வேண்டும். வழக்கமாக மெட்ராஸ் ஐ குணமடைய 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும் சிலருக்கு மூன்று முதல் நான்கு வாரம் வரை கூட எடுத்துக் கொள்ளலாம். எனவே தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இடையில் நிறுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.