சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் திடீர் இயந்திர கோளாறு காரணமாக மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 172 பயணிகளுடன் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, விமானம் தாமதமாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள், இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு சரி செய்யப்படாததால், இரவு 8 மணிக்கு விமானம் புறப்படவில்லை. மீண்டும் இரவு 9 மணிக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கும் புறப்படாததால், பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள், இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படும் என்று கூறினர். அதன்பின்பு இரவு 10 மணிக்கு விமானம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து காத்திருந்த பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, இரவு 10.30 மணிக்கு, மூன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.