சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, கே.எப்.டபள்யூ நிதியின் கீழ், விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதியில் எம்.1 மற்றும் எம்.2 பாகங்களில் ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெருங்குடி சர்ச் சாலையில் இப்பணி துவக்க விழா நடந்தது.
நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மாநகரில் வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மக்களுக்கு அர்ப்பணித்து வருகிறார். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட எந்த பணியாக இருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான பணிகள் நடைபெற்றுள்ளது. சென்னை மாநகர் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை. மழைக்காலங்களில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பெரிய பாதிப்பை சந்தித்து வந்தது.
தற்போது சென்னையில் 20 செ.மீ., அளவிற்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கிற நிலையை உருவாக்கி இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், 14வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன், 15வது மண்டல குழு தலைவர் மதியழகன், பாலவாக்கம் சோமு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பாலவாக்கம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.