சென்னை: திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை முடுக்கி விட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. திமுகவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டன.
இந்த குழுவினர் மூலம் மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.இதனையடுத்து இக்குழுவின் பரிந்துரையின் படி மண்டல அளவில் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்த 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் வடமாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு, விருதுநகர்,
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சக்கரபாணி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் ஆய்வு கூட்டத்தை நடத்தி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அப்போது வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசித்து தீர்த்து வருகின்றனர். அவர்களிடம் கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர்கள் எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றேனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மண்டல பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தொகுதி வாரியான நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது கேட்டறிந்தார். மேலும் தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார். மேலும் மண்டல பொறுப்பாளர்கள் மேற்கொள்ள உள்ள கூடுதல் பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது அவர்களிடம் மு.க.ஸ்டாலின் விளக்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பை நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளாார்.
முதல் நாளில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார். மீண்டும் அவர் 17ம் தேதி முதல் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இந்த நிலையில் மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.