சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தில், விமானி இயந்திரக் கோளாறை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டநிலையில், விமானி விமானத்தை ஓடுபாதையில் ஓட்ட தொடங்குவதற்கு முன்பு விமான இயந்திரங்களை சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து விமான கோளாறு சரி செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது. இதனால், 168 பயணிகள் உள்பட 174 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.