சென்னை:சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த டெங்கு காய்ச்சல் அதிகமான அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் டெங்கு குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனை தடுக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் பணிக்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.