சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த டபுள் டெக்கர் ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பயணி சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அந்த பயணியின் உடமைகளை சோதனையிட்டபோது ரூ.25 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும் சென்னை சவுகார்பேட்டையில் நகைக்கடையில் கொடுக்க பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயிலில் பயணம் செய்த ஆந்தராவைச் சேர்ந்த வாசு என்பவரிடம் ரூ.11.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க நகை, பரிசு பொருட்கள் வியாபாரம் தொடர்பாக சென்னையில் உள்ள கடையில் பணம் கொடுக்க கொண்டு வந்ததாக வாசு தெரிவித்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இவை ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பவம் குறித்து சென்னை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 2 பேரும் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க ஆர்.பி.எப். போலீசார் முடிவு செய்துள்ளனர்.