சென்னை: சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தய நேரம் தொடர்பாக மாலை 5 மணிக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இன்றிரவு கார் பந்தயம் நடக்கிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி, இன்றும், நாளையும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என
தீவுத்திடலை சுற்றிலும் 3.5 கிமீ நீளத்துக்கு நடைபெற உள்ளது.
இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மாலை நடைபெற இருந்த கார் பந்தயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தய நேரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த தகவல் பின்வருமாறு;
“தொழில்நுட்பக் கோளாறுகளால் சென்னையில் நடைபெறும் இந்திய பந்தய விழாவில் இன்றைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதை எங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம்.
அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை நாங்கள் உறுதி செய்வதால் உங்கள் பொறுமை மற்றும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை மாலை 5 மணிக்குள் பகிர்வோம், காத்திருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.