நெல்லை: சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.4 கோடி நிலத்தகராறில் வக்கீல் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். நெல்லை பாளையங்ேகாட்டை சீவலப்பேரி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் நெல்லை அருகே திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ரூ.1.75 கோடி மதிப்பிலான 52 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஜோன்ஸ் வாங்கியதாக கூறப்படும் நிலத்தில் தங்களுக்குரிய இடமும் உள்ளதாக கூறி வந்ததால், நிலம் ெதாடர்பான பிரச்னை இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று ஜோன்சுக்கு சொந்தமான 52 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதை ஜோன்சின் வக்கீல்கள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த புளியங்குளத்தைச் சேர்ந்த வக்கீல் சரவணராஜ் (41), மானூர் அடுத்த உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் சாம்ராபின் (28) மேற்பார்வையிட்டு வந்தனர்.
அப்போது அங்கு கும்பலாக வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வக்கீல்கள் சரவணராஜ், சாம் ராபின் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து சரமாரியாக வெட்டினர். இதில் சரவணராஜ் உயிரிழந்தார். சாம்ராபினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலை சம்பவம் தொடர்பாக செல்வம், பாக்கியராஜ், முத்துகுமார் (47), அந்தோனிராஜ் (34), ஜோசப் (56), செல்வராஜ் (62), அகஸ்டின் (37) , மார்க் (40), பிரான்சிஸ் (56), பொன்ராஜ் (38), ராஜேந்திரன் என்ற ஜப்பான் (39) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். ‘ஜோன்ஸ் வாங்கிய நிலத்தில் எங்களது பங்காளிகளின் நிலம் சுமார் 15 ஏக்கருக்கு மேல் உள்ளது. அந்த நிலத்தை எங்களது முன்னோர் வேறு யாருக்கும் விற்கவில்லை. இது தொடர்பாக நெல்லை ஆர்டிஓ அலுவலக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக 23ம்தேதி விசாரணை உள்ளதால் நாங்களும், எதிர் தரப்பினரும் ஆஜராக திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று பிரச்னைக்குரிய நிலத்தில் சுவர் மற்றும் வேலி போடும் பணியில் ஈடுபட்டதால் பணியை தொடரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அப்போது எதிர் தரப்பினர் எங்களது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியும், மிரட்டலும் விடுத்ததால் நாங்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினோம். இதில் படுகாயமடைந்த வக்கீல் சரவணராஜ் இறந்துவிட்டார். இவ்வாறு கைதானோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.