சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 66.15 கோடி மதிப்பிலான 58 புதிய (பி.எஸ்-6) தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண (பி.எஸ்-6) பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறி செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை இப்பேருந்துகள் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு:
* மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் தளம் 400 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
* தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மிட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி Kneeling வசதி உள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும், வீல்சேருடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இட வசதியும் உள்ளது.
* தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும்.
* பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், ஒலிபெருக்கி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் எல்.இ.டி டிஸ்பிளே போர்டு பொருத்தப்பட்டுள்ளது.
* மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் மற்றும் இட வசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் மற்றும் காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
* ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி பாதுகாப்பாக இயக்க ‘Rear view camera’, பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், புதிய வடிவிலான Dash Board அமைக்கப்பட்டுள்ளது.
* பேருந்தின் முன்புறம் ஓட்டுநர் பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க ‘Blind Spot Mirror’ பொருத்தப்பட்டுள்ளது.
* இன்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால், அணைப்பதற்கு ‘Fire Safety Nozzle Engine’ மேல் பகுதியில் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் நடராஜன், தொ.மு.ச. பேரவை பொருளாளர் நடராஜன், உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.