பகுதி 2
சென்ற இதழ் தொடர்ச்சி…
6. வாழ வந்த வாயுலிங்கம்
வாயுலிங்கேஸ்வரர் – விருத்தாம்பிகை
மேட்டுப் பாளையத்திற்கு அருகே உள்ளது. இங்கு வாயுபகவான் பூஜை செய்து நலங்கள் யாவும் பெற்றார். இது பருத்திப்பட்டு என்கின்ற ஊராகும். மிகவும் பழமையான கோயில்.
இக்கோயிலைச் சுற்றிலும் பருத்தி மரங்கள் சூழ்ந்து இருக்கும். பருத்தி வெடித்து அதனுடைய பஞ்சானது சிவபெருமானின் உடல் முழுவதும் மறைத்துவிடும். காண்பதற்கு பனிமலையில் சிவபெருமான் வீற்றிருப்பது போல இருக்கும். எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால், பருத்தியை நீக்கிதான் நாம் சிவபெருமானை காண வேண்டும். காரணம் பருத்திச் சூழ்ந்த லிங்கத்தை காணப்படும் பொழுது பனிமலை சூழ்ந்து இருப்பது போல காணப்படுவார். அதனால் இந்த தலத்திற்கு வாயு பகவான் தன்னுடைய உடலில் ஏற்பட்ட பிணியை நீங்குவதற்காக வழிபட்ட தலம். அனுமனுக்கும் அருள் கிடைத்த இடம் சிவபெருமான். வாயு பகவானை வாழ வைத்ததால் வாழ வந்த வாய்வுலிங்கம் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
திசை – வடமேற்கு. ராசி – கடகம்.
7. குபேரலிங்கம்
குபேரீஸ்வரர் – வேம்புநாயகி
ஆவடி நெடுஞ்சாலையில் இருந்து மூணு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதுதான் இந்த கோயில். இங்கு சோழபுரம் இறைவன் வேம்புநாயகி குபேரீஸ்வரர். பதினோராம் நூற்றாண்டில், சுந்தர சோழன் என்கின்ற அரசன் இந்த தலத்தை ஆட்சி செய்தார். அவர் மிகவும் நல்லாட்சி புரியும் மன்னர். இறைவனுக்காக பல தொண்டுகள் செய்து வந்துள்ளார். காலப் போக்கில் இந்த இடத்திற்கு சோழசுந்தரபுரம் என்று அழைக்கப்பட்டு, ஆவடி திருவேற்காடு ரோடு சாலையில் அருகே அமைந்துள்ளது. குபேரன் ஈசனை வணங்கி அருள் பெற்றதால், இந்த ஈஸ்வரன் குபேரீஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றார்.
நாம் இழந்த செல்வத்தைப் பெறுவதற்கும், பட்ட துன்பங்கள் நீங்குவதற்கும், நிறைவான வாழ்வு கிடைக்க இந்த தலத்திற்கு சென்றோம் என்றால், வாழ்வு மலரும் குபேரனுடன் லட்சுமியினுடைய அருட்கடாட்சம் கிடைக்கும். இந்த தலத்திற்கு வந்து நெய்தீபம் ஏற்றினோம் என்றால், குறைகள் அத்தனையும் தீர்ந்து நிம்மதியை அடைவோம். மிக சிறப்பான ராசியானது தனுசு, மீனம். திசை – வடக்கு திசை.
8. ஈசான்யலிங்கம்
வேதபுரீஸ்வரர் – பார்வதிதேவி
வேதபுரீஸ்வரர் வடகிழக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் திருவேற்காடு அருகில் கோலடி என்ற இடத்தில் இந்த தலமானது அமைந்துள்ளது. இங்கே காடுகளில் இடையே இவர் வீற்றிருக்கின்றார். பெரிய பாணலிங்க வடிவில் 12 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உடன் பார்வதி தேவியும் அழகாகக் காட்சி தருகிறார். வயக்காட்டு நடுவில் அமர்ந்திருப்பதால், இவரை வணங்கச் செல்லும் பொழுது பசுமையானக் காட்சிகளும் அழகாக கவர்ந்து செல்லும் மேகமூட்டமும் கோழி, பசுக்கள், ஆடுகள், பறவை இனம் இங்கு வயல்வெளியில் இருப்பதை காணலாம். இங்கு நாம் அமர்ந்தோம் என்றால், மனநிறைவும் உள்ளத்திற்கு ஒரு அமைதியும் கிடைக்கும். இவரை வணங்கினோம் என்றால் காரியத்தடை கண் திருஷ்டி போன்றவை விலகும்.
63 நாயன்மார்களின் ஒருவரான மூர்க்க நாயனார், இறைவனிடத்தில் பக்தி கொண்டு தினமும் அன்னதான கைங்கரியையும் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார். அதனால் தம்மிடம் உள்ள பொருட்களை அத்தனையும் அடியார்களுக்கு அமுதிட்டு செலவழித்தார். தம்மிடம் உள்ள பணம் முழுவதும் தீர்ந்ததால், அடுத்த கட்டத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்க, அப்பொழுது தெய்வம் செயல்படும் என்று கூறி வழியைக் காட்டினார். அதன்பின்பு அவர் தன்னுடைய மனைவினுடைய செல்வமாகிய நகைகள் அத்தனையும் விற்று சிவயடியார்களுக்கு கைங்கரியம் செய்து வந்தார், ஒரு கட்டத்திற்கு பின்பு விற்பதற்கு எந்த பொருளும் இல்லை என்ற நிலை வந்தவுடன், என்ன செய்வது என்று தெரியாது தடுமாறினார். தம்மூரில் சூதாட்டம் ஆடத் தொடங்கினார்.
அதனால் கிடைத்த பணத்தில் கைங்கர்யம் செய்து வந்தார். தம் ஊரில் அதிகமாக வென்றதனால் யாரும் அவருடன் விளையாட வரவில்லை. ஆதலால் வேற்று ஊர்களுக்கு சென்று அவர் சூதாடி வென்றார். முதலில் சூதாடி தோற்றுவிடுவார். எதிராளி, நாம் ஜெய்ப்போம் என்று இறுமாப்புடன் ஆடும் பொழுது, தன் கைவரிசையைக் காட்டி ஜெயித்து விடுவார். தம்முடன் சண்டை போடுபவர்களை மூர்க்கத்தனமாக வெட்டுவதால் மூர்க்கநாயனார் என்ற பெயரும் பெற்றார். ஜெயித்த பணத்தை சிவபெருமானுக்கே செலவு செய்தார். அவர் பிறந்ததும் இந்த திருத்தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திசை – வடகிழக்கு.
ராசி – மிதுனம், கன்னி.
பொன்முகரியன்