மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து, நேற்று முதல் இன்று அதிகாலை வரை குறைந்த பயணிகளின் எண்ணிக்கை காரணமாக வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தொடர்ந்து, அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் சென்னை விமானநிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் இயக்கப்பட்ட விமானங்களில் வந்த பயணிகளின் எண்ணிக்கை குறைந்தளவே காணப்பட்டது. இதனால், சென்னை விமானநிலையத்தில் அதிகளவிலான பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முதல் இன்று காலை வரை வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமானநிலையத்தில் நேற்று ரத்து செய்யப்பட்ட 6 விமானங்கள் தவிர, மற்ற உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில் பயணிகளின் வருகை மிக குறைவாகவே இருந்தன. இதனால் சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், காலை மற்றும் மதியம் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் விமானங்களை ஒருங்கிணைத்து ஒரே விமானமாக இயக்கினர். குறிப்பாக, பஹ்ரைனிலிருந்து நேற்றிரவு 8.30 மணியளவில் சென்னை வரும் விமானம் வரவில்லை.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் வழக்கமாக இன்று காலை சென்னை வந்ததும், அதில் நேற்று செல்லவேண்டிய பயணிகளையும் இணைத்து அனுப்பி வைத்தனர். சென்னை விமானநிலையத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்நாட்டு முனையத்தில் காலை புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம், நேற்றிரவு புனே செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் என 3 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், புதுடெல்லியில் இருந்து நேற்று காலை சென்னை வரும் ஏர்இந்தியா விமானம், நேற்றிரவு புனேவில் இருந்து சென்னை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று அதிகாலை கொழும்புவில் இருந்து சென்னை வரும் லங்கன் ஏர்லைன்ஸ் என 3 விமானங்களின் வருகையும் குறைந்தளவிலான பயணிகளின் எண்ணிக்கையால் ரத்து செய்யப்பட்டது. நேற்று முதல் இன்று மாலைவரை குறைந்தளவிலான பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பல விமானங்களின் வருகை, புறப்பாடு சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருகை, புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த மிகக் குறைந்தளவிலான பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் விமான டிக்கெட்டுகளும் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.