சென்னை: சென்னை விமான நிலைய பணியில் இருந்த மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திடீரென உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய உளவு பிரிவான இன்டலிஜென்ட் பீரோ எனப்படும் ஐ.பி. பிரிவில் உதவி ஆய்வாளராக பணியில் இருந்தவர் முருகேசன் (55). இவர், சென்னை விமான நிலையத்தில் ஐ.பி. உதவி ஆய்வாளராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் விமான நிலைய பணியில் முருகேசன் ஈடுபட்டிருந்தார். உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் ஒன்று புறப்பாடு பகுதியில் நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கே நின்ற விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் முருகேசனை அவசரமாக விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் முருகேசனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பிறகு சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து சென்று, முருகேசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, முருகேசனின் உடல் வேன் மூலம் அவருடைய சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.