சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்ட இலங்கை பயணிகள் விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தில் இலங்கை, துபாய் விமானங்களில் வரும் பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த சலீம் என்பவர் உட்பட 4 பேர் சுற்றுலாப் பயணிகளாக சென்னைக்கு வந்தனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையில் சுங்க அதிகாரிகள், அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சலீம், தாங்கள் துணி வியாபாரிகள் என்றும், சென்னையில் இருந்து இலங்கைக்கு துணி வாங்கிச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.
அப்போது சுங்க அதிகாரிகளுக்கும் இலங்கை பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இலங்கைப் பயணிகள் 4 பேரும், சுங்க அதிகாரிகளை கடுமையாக மிரட்டியதாக சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இலங்கைப் பயணிகள் நான்கு பேரும், சுங்க அதிகாரிகள் தங்களை தாக்கியதாக புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுங்க அதிகாரிகள், இலங்கை பயணிகள் 4 பேரையும் வெளியில் விடாமல் பிடித்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 4 பேர் மீதும், தங்களை சுங்கச் சோதனை செய்ய விடாமல் மிரட்டியதோடு, தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை விமான நிலைய போலீசில் சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


