சென்னை: சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய வேளாண் டிரோன் உள்நாட்டு உற்பத்தி மையம் மற்றும் 300 உயர் திறன் சிறப்பு மையங்களை ஒன்றிய வளர்ச்சி துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் கமலேஷ் பஸ்வான் கூறியதாவது:
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இதுவரை 4,000 டிரோன்களை உற்பத்தி செய்துள்ளது. குறிப்பாக, 35,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கருடா ஏரோஸ்பேஸின் அதிநவீன வேளாண் டிரோன் உள்நாட்டு உற்பத்திக்கான வசதி, மேம்பட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனைக்கான மையமாகும். மறுபுறம், பயிற்சி திட்டமும் கருடா ஏரோஸ்பேஸின் முதன்மையான முயற்சியாகும். இது கல்வியாளர்கள், நிபுணர்கள் சான்றளிக்கப்பட்ட டிரோன் பயிற்றுனர்களாக மாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.